தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு செந்தில் பாலாஜி, சகோதரருக்கு சம்மன்: லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது

சென்னை: தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அதேநேரத்தில் போலீசார் லுக் அவுட் நோட்டீசும் வழங்கியுள்ளனர்.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி, சிலர் தமக்கு 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசி மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு, நரேஷ், மற்றும் தியாகராஜன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அதிமுக பிரமுகர் சீனிவாசன், செல்வன், ராஜேஷ் மற்றும் கார்த்திக் ரமேஷ் உள்பட மேலும் 5 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கைதான நரேஷ் அளித்த வாக்குமூலத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே தான் தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை சந்தித்துப் பேசியதாக குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், இந்த சதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அவரது தந்தை கைலாசத்திடம் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரும் இந்த சம்மனை முறைப்படி வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் முதல்கட்ட தகவல் அறிக்கையில் தனது பெயர் சேர்க்கப்படாத நிலையிலும், காவல்துறையினர் வேண்டும் என்றே தம்மை குறிவைத்து இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்துவதாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் வெளிநாடு செல்லாமல் இருப்பதற்காக விமானநிலைய போலீசாருக்கு லுக் அவுட் நோட்டீசை போலீசார் வழங்கியுள்ளனர்.

Related Stories: