சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக் கூறி, முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேநேரம், குட்கா முறைகேடு வழக்கை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
