சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒருபுறம் வெள்ளைப் பவுடர் புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாகக் கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாகச் சொல்லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காகச் சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாகப் புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர், ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதல்வர் விஜய் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை, காவல்துறையின் மூலமாகப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையினரை கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராகச் சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத்தனத்தை உண்மையான முதல்வர் விஜய் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன?
ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை நடந்து வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கன்டென்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசு பாதுகாக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும். இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
