சென்னை: என்எல்சியின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்வது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நவரத்தின பொதுத்துறை நிறுவனமாகும். மாநில அரசின் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடும் பல தசாப்தங்களாக இயங்கி வருகிறது.
தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகத்தின் தேவையை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களின் மின் தேவையையும் பூர்த்தி செய்து வருவதோடு, இந்நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் சில இடங்களில் உள்ளன. இந்நிறுவனத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும்.
இந்தாண்டு ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்டி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்படி சிறப்பாக செயல்படும் நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு விற்பது என்பது பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பு, கல்வி, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி பறிப்பு, புதிய கல்வி கொள்கை திணிப்பு, நீட் தேர்வு என தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வரும் நிலையில் தற்போது நவரத்தின பொதுத்துறை நிறுவனமான என்எல்சி பங்குகளையும் விற்பனை செய்வது என்பது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.
எனவே, இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு, ஒன்றிய பாஜ அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களும், ஊழியர்களும் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
