சென்னை: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிப்பேன், என மிரட்டி 17 வயது கபடி வீராங்கனையை பலாத்காரம் செய்த பிரபல பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கண்ணகிநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில், அண்மையில் பிரபலமான கபடி வீராங்கனை கார்த்திகாவின் கபடி பயிற்சியாளர் ராஜூ. இவர் கடந்த 10 வருடங்களாக அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார்.
கடந்த 2025ம் ஆண்டு பக்ரைனில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில், கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றபோது நாடு முழுவதும் இந்த கபடி பயிற்சியாளர் ராஜூ பிரபலமானார். தங்க பதக்கம் வென்ற வீராங்கனை கார்த்திகாவை பாராட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கிய திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள், அவரது பயிற்சியாளர் ராஜூவையும் கவுரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர்.
மேலும், ஏழ்மை நிலையில் உள்ள திறமையான மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்தது தொடர்பாக இவர் அளித்த பேட்டிகள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இப்படி நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்ட கண்ணகி நகர் கபடி அணி பயிற்சியாளர் ராஜூ, தற்போது தன்னிடம் பயிற்சி பெற்ற 17 வயது கபடி வீராங்கனையை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவி, கண்ணகி நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரைப் பெற்ற போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 17 வயதான பாதிக்கப்பட்ட சிறுமி, தாய், தந்தை இல்லாமல் அவரது பாட்டி ஆதரவுடன் வசித்து வருகிறார். இவருக்கு கபடி பயிற்சி அளிப்பதாக ராஜூ அழைத்து சென்றுள்ளார். அப்போது, என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டிகளில் விளையாட அனுபதிப்பேன், என்று மிரட்டிய பயிற்சியாளர் ராஜூ, சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், பயிற்சியாளர் ராஜூ, தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் சிறுமிகளை மட்டுமே கபடி அணியில் வைத்துக் கொள்வதாகவும், அட்ஜஸ்ட்மென்ட் செய்யாத சிறுமிகளை பயிற்சி அளிக்கும் போது சக வீராங்கனைகள் முன்பு திட்டுவது, அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு, உனக்கு எல்லாம் கபடி வராது, நீ எல்லாம் எதற்கு கபடி ஆட வருகிறாய் என்று தரக்குறைவாக திட்டி அணியில் விளையாட விடமாட்டார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்த பயிற்சியாளர் ராஜூ, தற்போது தலைமறைவாகியுள்ளார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் கண்ணகி நகர் பகுதி, ஆரம்பத்தில் குற்ற சம்பவங்கள் அதிகம் அரங்கேறும் பகுதியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கல்வியிலும்,
விளையாட்டிலும் சிறந்து விளங்கி வரும் கண்ணகி நகர் பெயர் நாடு முழுவதும் பரவி பெருமை சேர்த்து வரும் நிலையில், கபடி பயிற்சியாளர் ராஜூவின் பாலியல் அத்துமீறல் வெளியாகி கண்ணகி நகர் பகுதி மக்களையும், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
