பரிசு பொருளுடன் காத்திருந்து… காத்திருந்து… காலங்கள் போகுதடி தவெகவில் சேர பனையூர் கேட்டில் தவம் கிடக்கும் விஜயபாஸ்கர்

* ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… கதவ எப்ப சார் திறப்பீங்க?

புதுக்கோட்டை: தவெகவில் இணைய பரிசு பொருளுடன் பனையூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் சி.வி.சண்முகம், வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமைச்சர் பதவி வழங்க முன்வராததையடுத்து 4 எம்எல்ஏக்கள் மட்டும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் தவிர மற்றவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைய மனு போட்டார் சி.விஜயபாஸ்கர். அவரை உடனடியாக சேர்த்துக்கொள்ளவும், பதவி வழங்கவும் விஜய் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த்துடன் சி.விஜயபாஸ்கர் கடந்த 24ம் தேதி இரவு நேரில் சந்தித்தார்.

அப்போது, முதல்வர் விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்தார்.  வரும் 29ம் தேதி (திங்கள்) இணைப்பு விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கூறினார். ஆனால் முதல்வர் விஜய்யை, நேரில் சந்திக்கவும், அவரது முன்னிலையில் இணையவும் வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களோடு வரும் 29ம் தேதி (திங்கள்) அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவில் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தவெக கட்சியில் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், சி. விஜயபாஸ்கர், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விராலிமலையில் வீடு, வீடாக சென்று பரிசு பொருட்களை வழங்க தொடங்கியுள்ளார்.சுமார் ரூ.300 மதிப்பிலான இந்த பரிசு தொகுப்பில், துருப்பிடிக்காத எஃகு பாத்திரம், குலாப் ஜாமூன் டின் மற்றும் ஒரு பேனா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை வீடு வீடாக வழங்கியுள்ளனர்.

அத்துடன், தனக்கு அளிக்கப்பட்ட 1,05,723 வாக்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வாக்காளர்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்று உறுதியளிக்கும் வகையிலுமான அச்சிடப்பட்ட கடிதம் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு விநியோகத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருப்பதாக தொகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் பல மணி நேரம் பனையூர் தவெக அலுவலகம் வாசலில் காக்க வைக்கப்பட்டு, பின்புற வாசல் வழியாகவும், எகிறி குதித்தும் உள்ளே சென்று அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர்.

அந்த வரிசையில் தற்போது விஜயபாஸ்கரும், பனையூர் கதவை தட்டிக்கொண்டு எப்போது கதவை திறப்பார்கள் என்று தொகுதி மக்களுக்கு கொடுத்த பரிசு பொருட்களுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் கதவை திறந்த அடுத்த நிமிடம் தவெகவில் இணைந்து விடுவார். ‘‘அதிமுகவில் கெத்தா இருந்த மனுஷன… இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே… காத்திருந்து…காத்திருந்து… காலங்கள்தான் போகுதடி…’’ என்று பாட்டுப்பாடி தொகுதி மக்களே விஜயபாஸ்கரை கலாய்த்து வருகின்றனர்.

Related Stories: