மதுரை: சொத்தின் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யவோ, மாற்றியமைக்கவோ சார் பதிவாளர்களுக்கு அதிகாரம் இல்லை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆபேல் மூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விவசாய நிலங்களை விவசாயிகள் விற்கும் நிலை ஏற்பட்டால், சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தி பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் பல மடங்கு கூடுதலாக பெறப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
இதனால் அந்த விவசாய நிலங்களை கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை. இதனால் பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளப்படும் விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். பதிவுத்துறை தனது சொந்த ஆதாயத்திற்காக, விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை நியாயமற்ற முறையில் உயர்த்துவது சட்டவிரோதமானது. எனவே, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி பத்திரப்பதிவு கட்டணத்தை பெறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர், ஒரு சொத்தின் மதிப்பு குறைவாக இருப்பதாக சார் பதிவாளர் கருதினாலும், அவர் உடனடியாக கூடுதல் கட்டணம் கேட்கக் கூடாது. முதலில் அந்த சொத்து ஆவணத்தை அவர் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அதன் பின், சரியான வழிகாட்டி மதிப்பை கணக்கிட அந்த ஆவணத்தை கலெக்டரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் ஒரு சார் பதிவாளருக்கோ அல்லது மாவட்ட பதிவாளருக்கோ வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. தமிழ்நாடு முத்திரைச் சட்டத்தின் கீழ் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவிற்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது. சொத்தின் மதிப்பை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்யக் கூடாது.
ஒரு பகுதியின் சொத்து மதிப்பை நிர்ணயிக்கும்போது சாலைகள், சந்தைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள், சுற்றுப்புற வளர்ச்சி, அண்டை நிலங்களின் மதிப்பு, விவசாய நிலங்களின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றை புறக்கணித்து அதிகாரிகள் தன்னிச்சையாக மதிப்பை நிர்ணயிப்பது சட்டப்படி செல்லாது. பதிவுத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனகூறி மனுவை முடித்து வைத்தனர்.
