காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நாரை ஏரியில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனுமதி ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல்களுடன் விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் வண்டல் மண்ணை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வண்டல் மண் எடுக்கும் பணிகளுக்காக விவசாயிகளிடம் தவெக கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புகழ்வேந்திரன் என்பவர் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் ஆத்திரத்தில் இருந்த நிலையில், வண்டல் மண் எடுக்கும் பகுதிக்கு வந்த தவெக நிர்வாகியை காருடன் முற்றுகையிட்டு, ‘‘அரசு சார்பில் சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டு, அனைத்து ஆவணங்களும் முறையாக பெற்றுள்ள நிலையில் கூடுதல் தொகை எதற்காக வழங்க வேண்டும்’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விவசாயிகளிடம் பணம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
