சேலம்: மதுரை அருகே பள்ளி மாணவிகளின் கால்களை தடவிய உயர்கல்வித்துறை அமைச்சர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு இருபாலர் பள்ளியில், முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரது பிறந்த தின விழா நடந்தது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
அப்போது நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் ஓடிவந்த களைப்பில் மேடையில் காலை நீட்டி அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற அமைச்சர் விஸ்வநாதன், வரிசையாக அமர்ந்திருந்த மாணவிகளின் கால்களை தடவி விட்டார். இந்த காட்சி அங்கிருந்தோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த குழந்தைகள் நெழிந்தனர். பெண் குழந்தைகளை தேவையில்லாமல் தொடுவது குற்றமாகும். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் கூறியதாவது: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு பேட் டச், குட் டச் என்பது தெரியுமா? தெரியாதா? தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலாக பெண் குழந்தைகள் தான் படிக்க செல்கிறார்கள். பெண் குழந்தைகளை அவர்களின் அனுமதி இல்லால் யாருமே தொடக்கூடாது என போக்சோ சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது பெண் குழந்தைகளின் கால்களை தடவி விடுவது என்பது நினைத்து பார்க்க முடியாத குற்றம்.
குழந்தைகள் கால்வலிக்கிறது என்று அமைச்சரிடம் சொன்னார்களா? இவர் என்ன பயிற்சி கொடுக்கும் கோச்சா, அல்லது டாக்டரா? ஒரு அமைச்சர் என்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இது பியூராக போக்சோ சட்டத்தில் வருகிறது. எனவே அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன்’ என்றார்.
