மதுரை:தஞ்சாவூரைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஜூன் 20ம் தேதி பெய்த கனமழையால் பட்டீஸ்வரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த 1.50 லட்சம் டன் வரையிலான நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தன. பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான தார்ப்பாய்கள் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது.
எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அறிவியல் பூர்வமான நிரந்தர சேமிப்பு கிடங்குகள் அமைக்க மாநில அளவிலான செயல் திட்டத்தை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இம்மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், ‘‘தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த பிரச்னை உள்ளது. ஒரு நாள் பெய்யும் மழையில், விவசாயிகளின் பல மாத உழைப்பு வீணாகிறது. குறைந்தபட்சம் தற்காலிக கூடாரமாவது அமைக்கலாமே’’ என்றனர். பின்னர், மனுவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
