‘ஆட்சி மாற்றத்துக்கு அவங்கதான் காரணம்’ திரிஷா படத்த வச்சே ஆகணும் இல்லைனா கலவரமே நடக்கும்: காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வாக்குவாதத்தால் சர்ச்சை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பொறுப்பு குணசேகரன் தலைமை வகித்தார். ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். அவை தொடங்குவதற்கு முன்பே, ‘‘மாநகராட்சியில் பணி ஒதுக்கப்பட்ட எந்த வேலையும் நடைபெறவில்லை’’ என்று திமுக, காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். அரங்கில் முதல்வர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள், ‘‘முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் வைக்க வேண்டும்’’ என்றனர்.

அதிமுக கவுன்சிலர்களும் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் வைக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடந்து முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி படமும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டது. அப்போது சுயேட்சை கவுன்சிலர் மேய்யர் எழுந்து, ‘‘திரிஷா படம் வச்சே ஆகணும்’’ என்றார். இதனால் அரங்கில் திடீர் சலசலப்பு நிலவியது.

தொடர்ந்து அவர், ‘‘திரிஷா படம் இங்கே வச்சே ஆகணும்… இந்த மன்றத்தில் வைக்கலைன்னா பெரிய கலவரமே நடக்கும். அனைவரும் வரிசையா படங்களை அடுக்கிக்கிட்டே போனீங்கன்னா, திரிஷா படம் வைக்க இடம் வேண்டாமா’’ என்றார். உடனே அங்கிருந்த ஒரு கவுன்சிலர், ‘‘அண்ணே… திரிஷா படத்தை எதுக்காக வைக்கச் சொல்றீங்கன்னு கேக்குறாக…’’.

‘‘ஏம்பா… இந்த ஆட்சி மாற்றத்துக்கு காரணமே அந்த அம்மா தான். அதனால சொல்றேன். திரிஷா படத்தை கொண்டு வந்து கட்டாயம் உடனே இங்கே வைக்கணும்… திரிஷான்னா உங்களுக்கு அவ்வளவு மட்டமா போச்சா…?. அடுத்த முதல்வர் திரிஷா தான்… அடுத்த முதல்வர் திரிஷா தான்… அடுத்த முதல்வர் திரிஷா தான்…’’ என ‘திரும்ப திரும்ப பேசுறே நீ… திரும்ப திரும்ப பேசுறே நீ…’ காமெடி பாணியில் கூவியபடியே இருந்தார்.

தொடர்ந்து அவர், ‘‘திரிஷா படத்தை வச்சு கூட்டத்தை நடத்த சொல்லுங்க…’’ என அங்கிருந்தவர்களிடம் புலம்பியபடி இருந்தார். இதனால் கூட்டத்தில் கலகலப்புடன் கூடிய பரபரப்பும் தொற்றிக்கொண்டது. கம்யூனிஸ்ட் உறுப்பினர் மஞ்சுளா பேசுகையில், ‘‘அனைவரின் படமும் வைக்கும்போது எங்கள் கட்சியின் மாநில செயலாளர் படமும் வைக்க வேண்டும்’’ என்றார். ‘இந்நாள், முன்னாள் முதல்வர்கள் படத்ைத வைக்கச் சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கு.. இந்த பெருசு ஏன் திரிஷா படத்ைத வைக்கச் சொல்லுது…’’ என கவுன்சிலர்கள் முணுமுணுத்தனர்.

Related Stories: