சேலம்: ஈழத்தமிழர்களுக்காக போராட்டத்தை நடத்தினோம் என சட்டசபையில் முதல்வர் விஜய் கூறிய நிலையில், அவர் ஈழத்தமிழர்களுக்காக கையெழுத்துக்கூட போட மறுத்தவர் என அமைச்சர் வன்னியரசு பேசிய பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் நேற்று முன்தினம் பேசுகையில், 2008ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம் என்று கூறினார். ஆனால் அவர் ஒரு கையெழுத்து கூட போட மறுத்தவர் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் வன்னியரசுவே உதாரணமாக இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நேரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகியும், தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவருமான அமைச்சர் வன்னியரசு, நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க சென்றார். அப்போது கையெழுத்து போட விஜய் மறுத்து விட்டார் என அவர் பேசும் பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வன்னியரசு பேசுகையில், ‘‘ராஜபக்சேவுக்கு எதிராக ஐ.நா. சபையில் ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க அவரது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றோம். ஆனால் அவர் இதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி கையெழுத்து போட மறுத்ததுடன் திருப்பி அனுப்பி விட்டார்.
அவரது தந்தை சந்திரசேகரை தொடர்பு கொண்டு, இனப்படுகொலை செய்த குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட வேண்டும் என கேட்டபோது, அவரது தந்தையும் மறுத்துவிட்டார்’’ என்று தெரிவித்து உள்ளார். ஈழத்தமிழர்களுக்காக ஒரு கையெழுத்து போடாதவர் இப்போது போராட்டத்தை நடத்தினோம் என கூறி இலங்கை தமிழர்களை ஏமாற்ற நினைப்பதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
