சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் விஜய் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வித அக்கறையும் காட்டாமல் இருக்கிறார். அவரது ஆட்சியில் அரங்கேறி வரும் கோர சம்பவங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை; முறையான பதிலும் சொல்லவில்லை. இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தவர் விஜய்.
கடந்த காலங்களில் அவர் பேசிய கருத்துக்களுக்காக, திமுக ஆட்சியில் இருந்தபோது வழக்குத் தொடர்ந்திருந்தால், அவர் அரசியலை விட்டே ஓடியிருப்பார். சைதாப்பேட்டையில் திமுகவை சேர்ந்த ‘ஜென்சி’ இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் புகார் அளித்து 3 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், திமுக சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், திமுக இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் ஒருபோதும் பயப்படாது. ஜென்சி இளைஞர்கள் திமுகவை நோக்கி வருவதை விஜய்யால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. விஜய் சட்டப்பேரவையில் ஆடியது போல வெளியிலும் ஆட முடியாது. தவெக ஆட்சியில் ஒரே இரவில் பாலியல் குற்றம் செய்தவர்களை இந்த அரசு கைது செய்ததா?. ஆனால், இரவு 10 மணிக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை, 12 மணிக்கே சென்று பிடிக்க காவல்துறை துடிக்கிறது.
ஜென்சி இளைஞர்கள் பேசுவதைக்கூட முதலமைச்சரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திருடனை பிடிப்பது போல காவல்துறையினர் வீடுகளுக்கு செல்கிறார்கள். சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட ஒருவரை தடுத்தால், அதே செய்தியை ஒரு லட்சம் பேர் வெளியிடுவோம். திமுக என்பது அடக்குமுறைகளையும், ‘மிசா’வையும் பார்த்த கட்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
