தொடக்க விழாவிற்காக 300 புதிய பஸ்கள் காத்திருப்பு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதா? தலைவர்கள் கண்டனம்

சென்னை: போக்குவரத்து கழகத்தில் புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளை தொடங்கி வைக்க முதல்வர் அனுமதி அளிக்காததால், கடந்த 4 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் தங்குவதற்கு இடமின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அன்புமணி, பாமக தலைவர்: புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கப்படும், என அறிவிக்காததால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு பேருந்தை ஒருமுறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.
தொடர்ந்து 3வது நாளாக இந்த பேருந்துகள் எந்த பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?.

ஷபிக் அஹம்மது, எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர்: மக்களுக்கான சேவையை முடக்கி, அரசுப் பணத்தை வீணடித்து, இப்படியொரு தொடக்க விழாவை நடத்துவது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல. உடனே, பேருந்துகளை இயக்க வேண்டும்.

ஆறுமுக நயினார், சிஐடியு மாநில பொதுசெயலாளர்: அரசு போக்குவரத்துக் கழகத்தின் 300 பேருந்துகள், 3 நாட்களாக சென்னையில் காத்திருக்கின்றன. நாங்கள் மாற்றமாக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய இந்த அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகளை இனி அனுமதிக்கக் கூடாது.

Related Stories: