ஜிம்பாப்வேயுடன் 3வது டி20; 23 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது இந்தியா

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான 3வது டி20 போட்டியில், 23 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ஜெய்ஸ்வால், கேப்டன் கில் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி 8 ஓவரில் 67 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஜெய்ஸ்வால் 36 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து சிக்கந்தர் பந்துவீச்சில் பென்னட் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த அபிஷேக் 10 ரன்னில் வெளியேற, கில் – ருதுராஜ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். கில் 66 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), ருதுராஜ் 49 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி முஸரபானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் 12 ரன், ரிங்கு சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஜிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர், முஸரபானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 7 ஓவரில் 39 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

மருமானி 13, சிக்கந்தர் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இந்த நிலையில், டியான் மையர்ஸ் – கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 6வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். டியான் 45 பந்தில் அரை சதம் அடித்தார். கிளைவ் 37 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வாஷிங்டன் சுந்தர் சுழலில் ரிங்கு வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் டியான் – மசகட்சா இணை கடுமையாக முயற்சித்தும், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டியான் மையர்ஸ் 65 ரன் (49 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), வெலிங்டன் மசகட்சா 18 ரன்னுடன் (10 பவுண்டரி, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 15 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஆவேஷ் கான் 2, கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர். வாஷிங்டன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி ஹராரேவில் நாளை மறுநாள் நடக்கிறது.

The post ஜிம்பாப்வேயுடன் 3வது டி20; 23 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: