சென்னையின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த 32 பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்: போலீசாரை திசைதிருப்ப தஞ்சாவூரில் பதுக்கியது அம்பலம்

அண்ணாநகர்: சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 32 பைக்குகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போலீசாரை திசை திருப்புவதற்காக, திருடிய பைக்குகளை தஞ்சாவூரில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (25). இவர், வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த பைக் கடந்த 8ம் தேதி திருடு போனது. இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தினர்.

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து இதேபோல் விலை உயர்ந்த பைக்குகள் திருடு போவதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்த திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் திருமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா (எ) அலி (19) மற்றும் அவரது கூட்டாளியான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அரிகரன் (24) என்பதும், இவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் திருமங்கலம், அரும்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், புழல், கொரட்டூர், வடபழனி, கே.கே.நகர், பேசின்பிரிட்ஜ், செம்பியம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், வெளிமாவட்டங்களிலும் விலை உயர்ந்த பைக்குகளை தொடர்ந்து திருடி வந்ததும், இதில் சென்னையில் திருடியை பைக்குகளை போலீசார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக ரூ.40 லட்சம் மதிப்புள்ள 32 பைக்குகளை தஞ்சாவூர் மாவட்டம், பணங்குடிதோப்பு என்ற மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து திருமங்கலம் போலீசார் தஞ்சாவூர் மாவட்டம் சென்று 32 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கலிமுல்லா, அரிகரன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் கலிமுல்லா மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டாளி அரிகரன் மீது 2 வழக்குகள் உள்ளன. கைதான இருவரும் போலீசாரிடம், திருடிய பைக்குகளில் பெட்ரோல் நிரப்பி ஜாலியாக ஊர் சுற்றுவோம். திருடிய பைக்குகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்த நிலையில் சிக்கிவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post சென்னையின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த 32 பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்: போலீசாரை திசைதிருப்ப தஞ்சாவூரில் பதுக்கியது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: