மகளிர் டி20 கிரிக்கெட்தங்கம் வென்று இந்தியா சாதனை: பைனலில் இலங்கையை வீழ்த்தியது

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாகக் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, பரபரப்பான பைனலில் இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் 2010ல் முதல் முறையாக டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டுமின்றி, 2014 தொடரிலும் இந்தியா சார்பில் அணிகள் அனுப்பப்படவில்லை. 2018ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.

இந்த முறை ஆண்கள், மகளிர் அணிகளை பிசிசிஐ அனுப்பி வைத்துள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பையும் உறுதி செய்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் இந்தியா – இலங்கை அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்தது. ஸ்மிரிதி மந்தானா 46 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன் (40 பந்து, 5 பவுண்டரி) விளாச, சக வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இலங்கை தரப்பில் இனோகா, சுகந்திகா, உதேஷிகா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன் மட்டுமே எடுத்து, 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹாசினி பெரேரா 25, நிலாக்‌ஷி டிசில்வா 23, ஒஷதி ரணசிங்கே 19, கேப்டன் சமாரி அத்தப்பத்து 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இனோஷி, உதேஷிகா தலா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் சாது டைட்டஸ் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி 2, தீப்தி, பூஜா, தேவிகா தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக களமிறங்கிய ஆசிய விளையாட்டு போட்டியிலேயே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை வெண்கலம் வென்ற இலங்கை, இம்முறை வெள்ளியுடன் திருப்தி அடைந்தது.

வங்கதேசத்துக்கு வெண்கலம்
மகளிர் டி20ல் 3வது இடத்துக்காக பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீசிய நிலையில், பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்தது. அலியா ரியாஸ் 17 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய வங்கதேசம் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்து 5 விக்கெட் வி்ததியாசத்தில் போராடி வென்றது. வெற்றி வாகை சூடியது. அந்த அணி ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. 2010, 2014ல் பாகிஸ்தான் மகளிர் அணி தங்கம், வங்கதேசம் வெள்ளி வென்றிருந்தன. இந்த முறை பாகிஸ்தானுக்கு 4வது இடம்தான் கிடைத்தது.

The post மகளிர் டி20 கிரிக்கெட்தங்கம் வென்று இந்தியா சாதனை: பைனலில் இலங்கையை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Related Stories: