வாலாஜா நகராட்சி தொடக்க பள்ளி ஸ்மார்ட் வகுப்பறையில் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்

*பெற்றோர்கள் வரவேற்பு

வாலாஜா : தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வரும் வகையில் செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துவது, ஆங்கில பயிற்சி போன்ற பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இதற்காக ரூ.455 கோடி நதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 11.76 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்டவைகள் ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் எளிதில் காற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாலாஜா நகராட்சி மத்திய தொடக்க பள்ளியில் மாணவர்கள் தொடு திரையில் பலவிதமான பாடல்கள், சித்திரங்கள் வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர்.

இதன்மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு ஆர்வத்துடன் வகுப்புகளுக்கு வருகின்றனர். இந்த வகை ஸ்மார்ட் வகுப்புகளுக்கு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, தலைமையாசிரியை சாந்தி கூறுகையில், ‘ஸ்மார்ட் வகுப்பில், எல்.இ.டி. திரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், தமிழ், ஆங்கில பாடங்களை, மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். ஆன்லைன் மூலம் பாடங்களையும் மாணவர்களுக்கு திரையில் காட்டுகிறோம்’ என கூறினார்.

The post வாலாஜா நகராட்சி தொடக்க பள்ளி ஸ்மார்ட் வகுப்பறையில் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: