வேலூர்: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி நள்ளிரவு சிம்ம தீர்த்த குளம் திறக்கப்பட்டது. இதில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் நள்ளிரவில் குளத்தில் புனித நீராடினர்.வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறன்று (கடை ஞாயிறு) திருவிழா நடைபெறுவது வழக்கம். அன்று இங்குள்ள சிம்மக்குளத்தில் நள்ளிரவு நீராடுபவர்களுக்கு பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு உள்ளிட்ட தீவினைகள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், திருமணமாகி பல வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் பாலாற்று புண்ணிய நதி, பிரம்ம தீர்த்த குளம், சிம்ம தீர்த்த குளம் ஆகிய தீர்த்தங்களில் புனித நீராடி கோயில் வளாகத்தில் உறங்கி வரம் கேட்டு உறங்கினால் கனவில் சுவாமி தோன்றி பூ, பழம், பாலாடை கொடுப்பதும் அடுத்த ஆண்டே பிள்ளை பேறு பெற்று தாய்மார்கள் கோயிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி இந்தாண்டு கடை ஞாயிறு விழாவையொட்டி நேற்று காலை பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் மூலவர் மார்க்கபந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு கோயில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் குழந்தை வரம் வேண்டி குவிந்த பெண்கள் பாலாறு, பிரம்ம தீர்த்த குளத்தில் புனித நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் உள்ளிருக்கும் சிம்மக்குளத்தில் நீராட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தொடர்ந்து மேள, தாளம் முழங்க சிம்மக்குளம் நள்ளிரவு திறக்கப்பட்டது. இதில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் சிறப்பு பூஜை செய்து நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம தீர்த்த குளத்தை திறந்து வைத்தனர். சிம்மகுளத்தில் பூஜைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர் மார்க்கபந்தீஸ்வரர், மரகதாம்பிகை தாயாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.
முன்னதாக குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் சிம்மகுளத்தில் நீராட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சிம்மகுளத்தில் நீராட ஒருவர்பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டனர். நீராடிய பெண் பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் படுத்து உறங்கினர். அதன்பின் மூலவர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 6.30 மணிக்கு பிரம்ம குளத்தில் தீர்த்தவாரியும், 9 மணிக்கு பாலகனுக்கு உபநயன தீட்சை, 9.30 மணிக்கு உற்சவ அலங்காரத்தில் எழுந்தருளும் மார்க்கபந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷகம் நடைபெற்றது.
