விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்: முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான ந.புகேழந்தி உடல்நலக்குறைவால் காலமானார். விழுப்புரம் அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் ந.புகழேந்தி (70). தெற்கு மாவட்ட செயலாளரான இவர் 2021 சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் விக்கிரவாண்டியில் நடந்த முதல்வர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். மேடைக்கு வந்த சில நிமிடங்களில் மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் தொடர் சிகிச்சை அளித்தும் நேற்று காலை சுமார் 10 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அமைச்சர் பொன்முடி, கௌதமசிகாமணி எம்.பி., அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அங்கு அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தினர், லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், உள்ளிட்டவர்கள் புகழேந்தி எம்எல்ஏ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து அவரது உடல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கலைஞர் அறிவாலயம் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. அங்கு அமைச்சர்கள் பொன்முடி, வேலு, மஸ்தான், எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தவாக நிறுவனர் வேல்முருகன், புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று புகழேந்தியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த புகழேந்தி எம்எல்ஏவின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

The post விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்: முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: