பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கக்கோரி கணிக்கர் சமூகத்தினர் திடீர் போராட்டம்

*குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின்போது, பழங்குடியினர் சாதிச்சான்று கேட்டு கணிக்கர் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் ரிஷப், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 417 பேர் மனுக்களை அளித்தனர்.அதன்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் வசிக்கும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களுக்கு பழங்குடியினர்(எஸ்டி) சாதிச்சான்று வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.

குடுகுடுப்பை அடித்து, குறிசொல்லவதை பாரம்பரியமாக கொண்டுள்ள தங்களுக்கு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பழங்குடியினர் என சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதிச்சான்றுக்காக விண்ணப்பித்துள்ள கணிக்கர் பழங்குடியினருக்கு எஸ்டி சான்று வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், சாதிச்சான்று கிடைக்காததால் தங்களுடைய குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கிறது என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனித்தனியே தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி விற்பனை சிறப்பு கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும், கைத்தறி ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதோடு, ஒவ்வொரு வாரமும் குறைதீர்வு முகாம் நடைபெறும் நாட்களில் கைத்தறி கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கக்கோரி கணிக்கர் சமூகத்தினர் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: