பல்கலையின் நற்பெயருக்கு ஊறுவிளைவித்தால் சீர்மிகு சட்டப்பள்ளியில் இருந்து மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்: பல்கலை முதல்வர் பாலாஜி எச்சரிக்கை

சென்னை: சீர்மிகு சட்டப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அடிக்கடி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கவும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பாலாஜி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சீர்மிகு சட்டப்பள்ளி, சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவர்கள் வருங்கால வக்கீலாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவர்களாகவும் உருவாக்கி வருகிறது. தேசிய அளவில் இயங்கிவரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் சில மாணவர்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாது சக மாணவர்களை உடல்ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதும், தங்களுக்குள்ளே தாக்கிக்கொள்வதும், வெளியில் இருந்து வருபவர்களை தாக்குவதும் நடந்து வருகிறது.

இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல. இதுவரை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனர். ஆனால் இனிமேல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சீர்மிகு சட்டப் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

The post பல்கலையின் நற்பெயருக்கு ஊறுவிளைவித்தால் சீர்மிகு சட்டப்பள்ளியில் இருந்து மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்: பல்கலை முதல்வர் பாலாஜி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: