காலி மதுபாட்டிலை திரும்பப்பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைவாசஸ்தலங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு 10 ரூபாயை திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு ேநற்று மீண்டும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி விசாரணைக்கு வந்தது. அப்போது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்று விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என்று கேட்டனர். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுகிறது. காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post காலி மதுபாட்டிலை திரும்பப்பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: