ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பதே மோடி ஆட்சி லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு முறைகேடு காரணமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய தேசிய தேர்வு முகமை என்பது ஒன்றிய அரசு அமைப்பாகத் தான் இருக்கிறது என இதுவரையிலும் கருதப்பட்டது. ஆனால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில், தேசிய தேர்வு முகமை என்பது வெறும் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் இது அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் தெரியவில்லை. தனிப்பட்ட சங்கமாக மட்டுமே செயல்படுவதால் இது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் நடைபெறும் தவறுகள் மற்றும் ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது? இந்த முகமையின் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் தேசிய தேர்வு முகமை தலைவராக இருக்கிற பிரதீப்குமார் ஜோஷி தான்.

இவர் ஏற்கனவே மத்திய பிரதேச மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்து 40 பேரை பலியாக்கிய வியாபம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் சம்மந்தப்பட்டவர். அப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர் தான் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருக்கிறார். இவரை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் பாஜ பாதுகாத்து வருகிறது.

நீட் ஊழலுக்கு பொறுப்பேற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய தேசிய தேர்வு முகமையின் தலைவர் பிரதீப்குமார் ஜோஷியே நீட் ஊழலை விசாரிக்கிற பொறுப்பையும் ஏற்றிருப்பது மிகவும் விசித்திரமாகவும், விந்தையாகவும் இருக்கிறது. ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரே ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமிக்கப்பட்டிருப்பது தான் மோடி ஆட்சியில் ஊழலை ஒழிப்பதன் லட்சணமாகும். நீட் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலமே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

The post ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பதே மோடி ஆட்சி லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: