நாகப்பட்டினம் முகாமில் பயங்கரம் இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் முகாமில் இந்திய கடற்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் ஆரியநாட்டு தெருவில் இந்திய கடற்படை முகாம் அலுவலகம் உள்ளது. கடலோரங்களில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல், போதைபொருட்கள் கடத்தல் தடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த முகாம் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கடற்படை வீரர்கள் பணியில் இருப்பது வழக்கம். அதே நேரத்தில் கடற்படை முகாம் அலுவலக வாயிலில் சுழற்சி முறையில் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் இந்திய கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று அதிகாலை 4மணி வரை இந்திய கடற்படை அலுவலகத்தின் வாசலில் பாதுகாப்பு பணியில் வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி.குப்பத்தை சேர்ந்த ராஜேஷ்(28) என்பவர் இருந்தார். அப்போது அதிகாலை 3.20 மணியளவில் அலுவலக வாசலில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் வெளியில் ஓடி வந்து பார்த்த போது அங்கு பாதுபாப்பு பணியில் இருந்த ராஜேஷ், பாதுகாப்பிற்காக தான் வைத்திருந்த இன்சாஸ் ரக துப்பாக்கியால் தனது தலையின் வலது புறத்தில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், உடனே உயர் அதிகாரிகளுக்கும், நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாகப்பட்டினம் டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், காவலர் ராஜேஷ், பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பத்தில் எதுவும் பிரச்னையா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சென்னையில் உள்ள இந்திய கடற்படை உயர்அதிகாரிகள் குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.
தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ், கடந்த 2015 ஆகஸ்ட் 17ம் தேதி இந்திய கடற்படை பிரிவில் பணியில் சேர்ந்தார். கடந்த 2021 ஏப்ரல் 20ந்தேதி முதல் நாகப்பட்டினம் கடற்படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கு இலக்கியா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடற்படை முகாம் அலுவலகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகப்பட்டினம் முகாமில் பயங்கரம் இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: