மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிகாரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுகட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரியில் பெய்து வரும் கனமழை மற்றும் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் உருண்டு விழுந்த பாறை உள்ளிட்டவற்றால் இன்றும், நாளையும் மேட்டுபாளையம் – ஊட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் அடித்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு படையெடுத்தனர். குளிர்பிரதேசங்களான கொடைக்கானல், ஊட்டியில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற குளிரை அனுபவித்த கோடை வெயிலில் இருந்து தப்பினர். இதற்கிடையே தான் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து கொடைக்கானல், ஊட்டி சென்று வந்தனர். இதற்கிடையே தற்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நன்கு பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் ஊட்டிக்கு வர வேண்டாம் என கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதையடுத்து மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இன்று, நாளை, நாளை மறுநாள் கனமழை வாய்ப்புள்ளது. இதனால் மேட்டுபாளையம் – ஊட்டி இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை இயங்க வேண்டிய மலை ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு டிக்கெட் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

The post மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து! appeared first on Dinakaran.

Related Stories: