தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை – மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 7 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மே 15ம் தேதி அறிவுறுத்தப்பட்டது. 8 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு நேற்றும், இன்றும் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 21.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 0.72 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகப்படியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 9 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாயுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கியதன் காரணமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒரு கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு. 7 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துளளன. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையத்திலிருந்து எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று. கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் நேற்றும் (18.05.2024), இன்றும் (19.05.2024) எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு 18.5.2024 முதல் 20.5.2024 முடிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று பொது மக்களது பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

 

The post தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: