தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேஷ் கைது செய்யப்பட்டார். நெல்லை அருகே ஆலங்குளம் அடுத்த நெட்டூரைச் சேர்ந்த சின்னத்துரை மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு தென்காசி நீதிமன்றத்தில் வக்கீல் தொழில் புரியும் அசோக் குமார் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சின்னத்துரை குடும்பத்திற்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் குழந்தை பாண்டியன் குடும்பத்திற்கும் நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ராணுவ வீரராக பணியாற்றும் குழந்தை பாண்டியனின் மகன் சுரேஷ் (27) விடுமுறையில் கடந்த வாரம் ஊருக்கு வந்தபோது இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் தங்களுக்கு பாதுகாப்பு கோரி சின்னத்துரை தரப்பினர் மனு கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், சின்னத்துரை குடும்பத்துக்கு குடைச்சல் கொடுத்துள்ளார். இதுகுறித்து சின்னத்துரை ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வக்கீல் அசோக்குமார் வீட்டில் இருந்த போது அங்கு வந்த சுரேஷ் மற்றும் சிலர், அவரை சரமாரியாக வெட்டினா். இது குறித்து கேள்விபட்டு அங்கு வந்த அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜையும் அக்கும்பல் வெட்டினர். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். துரைராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேரை கொன்ற வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

The post தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: