அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 பேருக்கு பட்டம் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் பாராட்டு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 957 பேர் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 998 மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். இதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீதாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் பிரகாஷ், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் உள்பட பல்கலைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் டி.ஜி.சீதாராம் பேசியதாவது: உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 26.5 கோடி மாணவர் சேர்க்கை பள்ளிகளிலும், 4.3 கோடி மாணவர் சேர்க்கை உயர்கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் சூழலில், இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர் எண்ணிக்கை 28.3 கோடியாக இருப்பது பெருமைக்குரியது. உயர்கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதம் என்ற நிலையை 2030ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற நோக்கில் பயணிக்கிறோம்.

ஆனால் தமிழ்நாடு கடந்த 2022-23ம் ஆண்டில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 47 சதவீதத்தையும், 2023-24-ம் ஆண்டில் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது. 2025ம் ஆண்டில் இன்னும் அதிகரிக்கும். அந்தவகையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சதவீதத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்த டிஜிட்டல் உலகில், பல புதுமைகள் நாள்தோறும் நிகழும் சூழலில், கல்வித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), ரோபோட்டிக்ஸ், தரவு அறிவியல் போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், மனித வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

மாணவர்களும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். தொழில்நுட்பக் கல்வித்துறை, உலகளாவிய அளவில் போட்டி நிறைந்ததாகவே இருக்கிறது. இந்தியர்கள், இந்திய படிப்புகள் இல்லாத ஒரு நிறுவனத்தைக்கூட இப்போது காண முடியாது. இன்ஜினியரிங் கல்லூரிகள் இன்று மூடப்பட்டுவரும் நிலையில், அந்த கல்லூரிகளின் தரத்தை, அதில் உள்ள படிப்புகளின் எண்ணிக்கையை உயர்த்த ஏ.ஐ.சி.டி.இ. நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிராந்திய மொழிகளில், ஏ.ஐ.சி.டி.இ. மூலம் வெளியிடப்பட்ட தொழில்நுட்பக் கல்வி புத்தகங்கள், 6 லட்சத்துக்கும் அதிகமான அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் துறை, மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு
அண்ணா பல்கலைக்கழக 44வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வார் என்பதை உறுதி செய்யும்வகையில் அழைப்பிதழில் அவருடைய பெயரும் அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால் அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவுக்கு வரவில்லை. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜிடம் கேட்டபோது, அமைச்சருக்கு அவசர பணிகள் இருந்ததால், கடைசி நேரத்தில் அவரால் பங்கேற்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.

The post அண்ணா பல்கலை 44வது பட்டமளிப்பு விழாவில் 1,14,957 பேருக்கு பட்டம் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: ஏஐசிடிஇ தலைவர் டி.ஜி.சீதாராம் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: