ரேஸ் கோர்ஸ் நிலத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டதும், 160 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும், அதன் மூலம் பருவமழை காலங்களில் சென்னை பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். இதுமட்டுமின்றி, வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுப்பது, ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது, கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது உள்ளிட்டவைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்க கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் ‘‘பசுமை பூங்கா’’ அமைக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்தநிலையில் கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பை தயார் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. மேலும், இந்த பூங்காவில் வண்ணமலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம் மற்றும் வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. கடந்தாண்டு செப்டம்பரில் ரூ.4832 கோடி மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான டெண்டரை அரசு கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தில் அமையவுள்ள பசுமை பூங்காவிற்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
