தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ₹37.59 கோடியில் மழைநீர் வடிகால் பணி: அமைச்சர், எம்பி தொடங்கி வைத்தனர்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ₹37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ₹37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்தில், 1வது வார்டுக்கு உட்பட்ட குருசாமி நகர் பிரதான சாலை மற்றும் குருசாமி நகர் 7வது தெரு ஆகியவற்றில் ₹1.56 கோடி மதிப்பீட்டில் 0.625 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 8வது வார்டுக்கு உட்பட்ட மணிமேகலை தெரு, ஆனந்தன் தெரு மற்றும் மாதவி தெரு ஆகிய பகுதிகளில் ₹97 லட்சம் மதிப்பீட்டில் 1.330 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ₹16 லட்சம் மதிப்பீட்டில் 0.395 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடவை ஓடையில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

மேலும், 2வது மண்டலத்தில் 17வது வார்டுக்கு உட்பட்ட பல்லவா சாலை, அமராவதி தெரு, சங்கரா சாலை, பாலாஜி சாலை, சங்கரன் சாலை விரிவு, பாலாஜி சாலை முதல் குறுக்குத் தெரு ஆகியவற்றில் ₹2.98 கோடி மதிப்பீட்டில் 0.075 கிலோமீட்டர் நீளத்திற்கும், 20, 21வது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.நகர், ஏ.ஜி.எஸ்.நகர், சாமிமலை நகர் மற்றும் நடேசன் சாலை ஆகியவற்றில் ₹2.85 கோடி மதிப்பீட்டில் 1.286 கிலோ மீட்டர் நீளத்திற்கும் கால்வாய் பணிகள் நடைபெற உள்ளது. அதேபோல், 3வது மண்டலத்தில் 22வது வார்டுக்கு உட்பட்ட ஜெயின் நகர் மற்றும் 2வது தெரு, சீதாராமன் தெரு, ஜெயின் நகர் பிரதான சாலை, காவேரி தெரு, கங்கா தெரு, ஸ்ரீராம் நகர் முதல் பிரதான சாலை ஆகியவற்றில் ₹3.80 கோடி மதிப்பீட்டில் 1.650 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 42வது வார்டுக்குட்பட்ட மாருதி நகர் பிரதான சாலை, மாருதி நகர் முதல் பிரதான சாலை, வேணுகோபால் சாமி தெரு மற்றும் வள்ளல் யூசூப் சாலை ஆகியவற்றில் ₹3 கோடி மதிப்பீட்டில் 0.950 கிலோ மீட்டர் நீளத்திற்கும் கால்வாய் பணிகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், 41வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீதேவி அவென்யூ முதல் டெலஸ் அவென்யூ 5வது பிரதான சாலை வரை ₹3.60 கோடி மதிப்பீட்டில் 1.100 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வார்டு 39க்குட்பட்ட திருமலை நகர் முதல் பிரதான சாலையில் ₹3.40 கோடி மதிப்பீட்டில் 1.075 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 44வது வார்டுக்குட்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் தெரு, விநாயகர் தெரு, பாண்டியன் தெரு, பவானி தெரு ஆகிய பகுதிகளில் ₹3.29 கோடி மதிப்பீட்டில் 0.640 கிலோ மீட்டர் நீளத்திற்கும் கால்வாய் பணிகள் நடைபெற உள்ளது.

4வது மண்டலத்தில் 56வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பிரதான சாலை, ராஜராஜேஸ்வரி நகர் ஆகியவற்றில் ₹2.13 கோடி மதிப்பீட்டில் 0.710 கிலோமீட்டர் நீளத்திற்கும், 5வது மண்டலத்தில் 65வது வார்டுக்குட்பட்ட ஐ.ஏ.எப் சாலையிலிருந்து சேலையூர் ஏரி கால்வாய் வரை ₹2.83 கோடி மதிப்பீட்டில் 0.480 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 67வது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் நகர் பிரதான சாலையிலிருந்து வேங்கை வாசல் ஏரி வரை ₹7.02 கோடி மதிப்பீட்டில் 2.145 கிலோ மீட்டர் நீளத்திற்கும் என மொத்தம் ₹37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், 22வது வார்டு ஜெயின் நகர் மற்றும் 5வது மண்டலம் 67வது வார்டுக்கு உட்பட்ட தேனுகாம்பாள் நகர், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

அதனைதொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அகரம் – கோவிலன்சேரி சாலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் மரக்கன்றினை நட்டனர். நிகழ்ச்சிகளில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், இ.ஜோசப்அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ₹37.59 கோடியில் மழைநீர் வடிகால் பணி: அமைச்சர், எம்பி தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: