மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் தேசியவாத காங்கிரசில் பிளவு: சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் துணை முதல்வர் ஆனார் அஜித் பவார்

மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார், ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு தனது ஆதரவை அறிவித் தார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும்,அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு அமைச்சர் பதவியும் உடனடியாக வழங்கப்பட்டது. தேசியவாத காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, மகாராஷ்டிர அரசியலில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா- பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. பின்னர் முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில் கூட்டணியை விட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெளியேறினார். இதைத் தொடர்ந்து சிவசேனா , தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டு, உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து வந்து, பாஜவுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வராகியுள்ளார். துணை முதல்வராக பாஜவின் தேவேந்திர பட்நவிஸ் உள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 29 பேருடன் ஷிண்டே அரசில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று காலை அஜித்பவார் , கட்சியின் சில முக்கிய தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் மும்பை தேவ்கிரியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால், கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 30 முதல் 40 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஆனால், சுப்ரியா சுலே கூட்டத்தின் பாதியிலேயே திடீரென வெளியேறினார். இந்தக் கூட்டம் நடைபெறும்போது, கட்சி தலைவர் சரத்பவார் புனேயில் இருந்தார். அவருக்கு இந்த கூட்டம் நடைபெறுவது தெரியாது என கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு அஜித்பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகை சென்றார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்களான சகன் புஜ்பால், பிரபுல் படேல் உள்ளிட்டோரும் சென்றனர். ராஜ் பவனில் துணை சபாநாயகர் நர்கரி ஜிர்வால் இருந்தார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அஜித்பவார் கடந்த வெள்ளிக்கிழமை அளித்ததாகவும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரமேஷ் பைஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், ஹசன் முஸ்ரிப், தனஞ்சய் முண்டே, அதிதி தட்கரே, தர்மாராவ் அட்ராம், அனில் பாட்டீல், சஞ்சய் பன்சோடே ஆகிய 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அஜித் பவாரும் மற்றவர்களும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்நவிசும் கலந்து கொண்டனர். பதவியேற்புக்குப் பிறகு அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த முடிவுக்காக சிலர் எங்களை விமர்சிக்கலாம். இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோம். மாநில வளர்ச்சிக்காகவே இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள், எங்களின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயரிலேயே இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் பல நாடுகளில் பிரபலமாக உள்ளார்.

அவரது தலைமையை ஒவ்வொருவரும் பாராட்டுகின்றனர்; புகழ்கின்றனர். எதிர்வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை பாஜவுடன் சேர்ந்து எதிர் கொள்வோம். இவ்வாறு அஜித்பவார் கூறினார். அஜித்பவார் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்ற 30 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும், அஜித்பவாருக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவருடன் சேர்த்து 9 எம்எல்ஏக்கள் பிரிந்து வந்துள்ளனர். கட்சியில் மொத்தம் 36 பேர் அஜித்பவாருக்கு ஆதரவாக உள்ளதாகவும், வரும் நாட்களில் 46 பேர் வரை அணி மாற வாய்ப்பு உள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் அஜித்பவாரை ஆதரிப்பதாக, கட்சியின் மற்றொரு எம்எல்ஏவும் மூத்த தலைவரும், தற்போது ஷிண்டே அரசில் அமைச்சராகியுள்ள சகன் புஜ்பால் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில பாஜ தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அஜித்பவார் உள்ளிட்டோர் இணைந்துள்ளது பிரதமர் மோடிக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்றார். தேசியவாத காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, மகாராஷ்டிர அரசியலில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

* தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள், தாலுகா தலைவர்கள் இளைஞர் அணியினர் அனைவரும் சரத்பவாரின் பக்கம்தான் உள்ளனர். அஜித்பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஷிண்டே அரசில் இணைந்து பதவிப் பிரமாணமும் எடுத்துள்ளனர். இது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தின் ஒரு பகுதிதான். எனவே, இதனை ஷிண்டே அரசுக்கு இந்தக் கட்சி அளித்த ஆதரவாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசில் சேர்ந்து பதவிப்பிரமாணம் எடுத்தது அவர்களது சொந்த முடிவு. கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு மகேஷ் தபசே தெரிவித்தார்.

* நடவடிக்கை எடுக்கப்படும்: சரத்பவார் உறுதி
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கட்சி கட்டுப்பாடுகளை மீறி ஷிண்டே அரசில் இணைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அஜித்பவார், சகஜ் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், ஹசன் முஸ்ரிப் போன்ற சில தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. மகாராஷ்டிர அரசியலில் அரங்கேறிய இன்றைய சம்பவம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படியல்ல. இங்கிருந்து வெளியேறியவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக உள்ளது. ஒரு சிலர் சொல்கிறார்கள் என்பதற்காக கட்சி உடைந்ததாக கூற முடியாது. நாங்கள் மக்களிடம் செல்வோம். அவர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

* அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்கும் முயற்சி?
ஷிண்டே பட்நவிஸ் அரசில் இணைந்துள்ள அஜித்பவார் மற்றும் அவருடன் சென்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு இருப்பதாகவும் இதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தில்தான் அவர்கள் ஷிண்டே அரசில் இணைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

3வது முறையாக பதவியேற்ற அஜித்பவார்

* தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அஜித்பவார், மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து நேற்றுடன் சேர்த்து 3வது முறையாக பதவியேற்பு செய்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவியை பாஜ விட்டுத்தராததால் பாஜவுடனான கூட்டணியை அப்போதைய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முறித்துக் கொண்டார்.

அதன்பிறகு யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இதையடுத்து அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று பாஜவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதில் பட்நவிஸ் முதல்வராகவும், அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் இந்த அரசு 80 மணி நேரமே நீடித்தது.

* அதன்பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் உத்தவ் முதல்வரானார். அப்போது தேசியவாத காங்கிரசுக்கு மீண்டும் திரும்பி வந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

* பின்னர் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்று, பாஜவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வராகியுள்ளார்.பட்நவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

* தற்போது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேருடன் ஷிண்டே அரசில் இணைந்து துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை பதவியேற்றுள்ளார்.

* ஊழல் வழக்குகள்
அஜித்பவார் மீது கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு நிலுவையில் உளளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோல், அஜித்பவார் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும், விதர்பா பாசன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபோல், சர் சேனாபதி சந்தாஜி கோர்படே சர்க்கரை ஆலை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அவரது வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தியிருந்தது. சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.100 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மற்றும் 16 பேர் மீது 2015ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் தேசியவாத காங்கிரசில் பிளவு: சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் துணை முதல்வர் ஆனார் அஜித் பவார் appeared first on Dinakaran.

Related Stories: