பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்த வழக்கில் பள்ளியின் தாளாளரான, சிறுமியின் உறவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதியரின் மகள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி, பள்ளியில் தாளாளராக பணிபுரியும் 38 வயதான உறவினர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்த நிலையில், 2017 மார்ச் 29ல் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு, குடிநீரில் மயக்க மாத்திரை கொடுத்த உறவினர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து, சிறுமியை மிரட்டியும் வந்துள்ளார். இதையடுத்து, தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். மகளிடம் தவறாக நடந்தவர் உறவினர் என்பதால் அவருக்கு எதிராக புகாரும் சிறுமியின் பெற்றோர் கொடுக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய உறவினரும், அவரது மனைவியும், சிறுமியை மன ரீதியாக காயப்படுத்தி உள்ளனர். இதில் விரக்தியடைந்த சிறுமி, 2017 செப்டம்பர் மாதம் 9ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சிறுமி கடிதம் எழுதிவைத்துள்ளார். அதன் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உறவினர் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு நடந்து வந்தது. போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் அனைவரும் பிறழ்சாட்சியாக மாறியது துரதிருஷ்டவசமானது. குற்றத்தை செய்தவருக்கு எதிராக கடும் நடவடிக்கையை சிறுமியின் தந்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தன் மகளை பாதுகாக்க தவறிவிட்டார். ஏனெனில் குற்றத்தை செய்தவரின் மனைவி, சிறுமியின் தந்தைக்கு ரத்த வழி உறவினர். இதனால், தன் மகளை பறிகொடுத்த பிறகும் அவர் தனது உறவினரை விட்டுக்கொடுக்கவில்லை. சிறுமி இறப்புக்கு காரணமான உறவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: