இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டை தொடர்ந்து வட மாநிலங்களும் நீட் தேர்வை தற்போது எதிர்க்க துவங்கியுள்ளனர். குறிப்பாக நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வில் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்ததாகவும் மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை வினாத்தாள் கசிவு பற்றிய சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைக்கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் பல மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர் சாய் தீபக் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், ‘‘நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே.5ம் தேதி நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக வினாத்தாள் கசிந்துள்ளது.
அதேப்போன்று கருணை மதிப்பெண் என்ற பெயரில் தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண்களை வழங்கியுள்ளது. குறிப்பாக நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 11 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே இத்தனை முறைகேடுகளுடன் நடந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிய அட்டவணையின் அடிப்படையில் நீட் தேர்வு மீண்டும் நடத்த வேண்டும்.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று. குறிப்பாக கலந்தாய்வு தொடங்க உள்ளதால் மனுக்களை அவசர வழக்காக கோடைக்கால விடுமுறை சிறப்பு அமர்வில் பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசனுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, மனுவில் உள்ள சாராம்சங்களை கோரிக்கையை நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அதில் குறிப்பாக கடந்த மே.5ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிய தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதேப்போன்று மருத்துவ கலந்தாய்வுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘’நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
இதுபோன்ற சூழலில் தேர்வை ரத்து செய்தால், அது மற்ற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்படைய செய்யும். எனவே நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதேப்போன்று நடைபெறவிருக்கும் மருத்துவ கலந்தாய்வுக்கும் தடை விதிக்க முடியாது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. குறிப்பாக இதுபோன்ற வரைமுறையில்லாத குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என வேதனையாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post முறைகேடு குற்றச்சாட்டுகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை கெடுகிறது: உச்ச நீதிமன்றம் வேதனை; தேர்வு முகமைக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.