கொரோனா 2வது அலை காரணமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று 2வது அலை மக்களை அச்சுறுத்தி வருவதால், தமிழக அரசு லாக்டவுன் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 26ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கவில்லை. ஆனால், சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கட்டாய மருத்துவ பரிசோதனை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளை, அதன் தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்பட 10க்கும் மேற்பட்ட நடிகர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், படங்களுக்கான டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு, எடிட்டிங் போன்ற பணிகள் தடையின்றி நடந்து வருகிறது. ‘தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றால், படப்பிடிப்பில் பணியாற்ற வேண்டாம்’ என்று பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது துணை சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. சில மலையாள சினிமா படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி, பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அல்லு அர்ஜூன் போன்றோரின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சினிமா தியேட்டர்களும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது.

Related Stories: