மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை, ஜூன் 10: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும். அதிகமாக மழை பெய்யும்போது மழைநீர் தேங்க கூடாது என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடிகால் பணி மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழைக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, வாரம் ஒருமுறை சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலும், மாதம் ஒரு முறை தலைமை செயலாளர் தலைமையிலும் மின்சார துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது.

அதன்படி தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ₹1.50 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிகால் 2200 மீட்டர் நீளத்தில் முரேஸ் கேட் சாலையிலிருந்து லஸ் சர்ச் சாலை மற்றும் கச்சேரி சாலை வழியாக பக்கிங்காம் கால்வாய் வரை 2200 மீட்டர் நீளத்தில் 2.40 மீட்டர் X 2.80 மீட்டர் அளவில் வளைவு வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா சாலை, கதீட்ரல் கார்டன் தெரு, டி.டி.கே. சாலை, எல்லையம்மன் காலனி, வீனஸ் காலனி, கஸ்தூரி ரங்கன் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள மழைநீர் வடிந்து செல்வதற்கு வசதியாக இந்த கால்வாய் அமைக்கப்படுகிறது.

இதேபோல், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மாம்பலம் கால்வாயில் சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் ₹59.42 கோடி மதிப்பில் 3065 மீட்டர் நீளத்தில் மேம்பாட்டுப் பணிகளில், அன்பு காலனி பகுதியில் தாமஸ் நகர் 2வது தெரு முதல் குளக்கரை சாலை வரை இரு கரைகளிலும் 487 மீட்டர் நீளத்தில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிதலமடைந்த 2 நடை மேம்பாலங்களை இடித்து புதிதாக ₹11.70 கோடி மதிப்பில் 2 நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மாம்பாலம் கால்வாயில் ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரம் பயன்படுத்தி ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோல், ராயபுரம் மண்டலம், 61வது வார்டுக்கு உட்பட்ட பூந்தமல்லி பிரதான சாலையில் காந்தி இர்வின் பாலம் சாலை அருகில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்பில் ₹5.50 கோடி மதிப்பில் 386 மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணாநகர் மண்டலம், 99வது வார்டுக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலை சந்திப்பில் ₹18 லட்சம் மதிப்பில் உள்ள மாநகராட்சி மழைநீர் கால்வாயை நெடுஞ்சாலைத்துறை மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட கங்காதீஸ்வரர் கோயில் குளத்தில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், ₹1.15 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 98வது வார்டுக்கு உட்பட்ட அயனாவரம் சாலையில் 1.2 மீட்டர் X 1.2 மீட்டர் அளவில் 1664 மீட்டர் நீளத்தில் ₹7.27 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணாநகர் மண்டலம், 94வது வார்டுக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ஏரியில் கூடுதலாக ₹7.90 கோடி மதிப்பில் வில்லிவாக்கம் குளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழைக்கு முன்னதாக இந்த பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வண்டல்கள் அகற்றம்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் 1,242 கிலோ மீட்டர் நீளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகாலின் மீதமுள்ள நீளத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட 87,719 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் இதுவரை 37,023 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் வண்டல்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவளம் வடிநிலப் பகுதிகளில் 158 கி.மீ, நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், 116 கி.மீட்டர் நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் 760 கிலோ மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், 553 கி.மீட்டர் நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நவீன இயந்திரங்கள்
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரை அகற்றி தயார்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இதற்காக 15 மண்டலங்களுக்கும் தலா ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆம்பிபியன்ஸ், ரோபோடிக் எக்ஸ் கேவேட்டர்கள் மற்றும் மினி-ஆம்பியன்கள் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக ஜூன் 30க்குள் பணிகள் முடிக்கப்படும். தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு அக்டோபருக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

The post மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: