திருவனந்தபுரம்: கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. சிகிச்சையில் இருந்த 12 வயது சிறுமி நேற்று அதிகாலை இறந்தார். கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியான களமசேரியில் ஒரு அரங்கத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெபக் கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் மாநாடு 29ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதில் சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரங்கத்திற்குள் 3 இடங்களில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தொடர்ந்து அங்கு தீயும் பிடித்து எரிந்தது.
குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் கருகி இறந்தார். அவர் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ் (55) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 51 பேர் காயமடைந்தனர். இந்தநிலையில் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி (52) என்பவர் நேற்று முன்தினம் இரவிலும், மலையாற்றுர் பகுதியைச் சேர்ந்த லிபினா (12) என்ற சிறுமி நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதைத்தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 30 பேர் சிகிச்சையில் உள்ளனர். 18 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே ஜெபக்கூட்டத்தில் குண்டு வைத்ததாக டொமினிக் மார்ட்டின் (57) என்பவர் நேற்று முன்தினம் திருச்சூர் கொடகரை போலீசில் சரண் அடைந்தார். போலீசில் சரணடைவதற்கு முன்பாக அவர் அதற்கான காரணத்தை விளக்கி தனது முகநூலில் வீடியோ ஒன்றையும வெளியிட்டார்.
குண்டுவெடிப்பு நடத்திய பின்னர் அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருந்தார். அதை போலீசாரிடம் ஒப்படைத்தார். டொமினிக் மார்ட்டினிடம் ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். கேரள சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் தலைமையில் கேரள போலீசாரும், என்ஐஏ உள்பட மத்திய உளவுத்துறை போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். டொமினிக் மார்ட்டின் மீது உபா சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
* குண்டு தயாரிக்க துபாயில் பயற்சி
டொமினிக் மார்ட்டின் சில ஆண்டுகள் துபாயில் ஒரு எலெக்டரிக்கல் நிறுவனத்தில் போர் மேனாக பணியற்றினார். அப்போதே அவர் யூ டியூபில் வெடி குண்டு தயாரிப்பது குறித்து பயிற்சி ெபற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தயாரிப்பது குறித்து துபாயில் சிலரிடம் சில விபரங்களை கேட்டு அறிந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* டிபன் பாக்சில் குண்டு வைத்தது ஏன்?
யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ அமைப்பின் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கப்படுவது கிடையாது. அவர்கள் தங்களது வீடுகளில் இருந்து உணவை டிபன் பாக்சில் கொண்டு வருவார்கள். இது டொமினிக் மார்ட்டினுக்கு தெரியும். இதனால் தான் அவர் வெடிகுண்டை டிபன் பாக்சில் வைத்து கொண்டு வந்துள்ளார். இதனால் யாரும் அவரை சந்தேகிக்க வில்லை. கூட்ட அரங்கில் மொத்தம் 6 இடங்களில் வெடிகுண்டை வைத்துள்ளார். கூடுதல் சேதம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெடிகுண்டுடன் பெட்ரோலையும் சேர்த்து வைத்து உள்ளார். இதனால் தான் குண்டு வெடித்த உடனேயே தீப்பிடித்தது. இதில் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. வெடிகுண்டுகளை சற்று தொலைவில் இருந்து ரிமோட் மூலம் தான் இயக்கினார். 6 வெடிகுண்டுகளில் 3 மட்டுமே வெடித்தன. அனைத்தும் வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.
* ஏடிஜிபி தலைமையில் தனிப்படை
குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். கேரள போலீசாரும் குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் தலைமையில் 20 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. டொமினிக் மார்ட்டின் தனியாக இந்த திட்டத்தை அரங்கேற்றினாரா? அல்லது அவரது பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அனைத்துக் கட்சி கூட்டம்
குண்டு வெடிப்பு தொடர்பாக திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் சிபிஎம், இந்திய கம்யூ, காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கேரளாவில் அமைதியை நில நாட்ட ஒருங்கிணைந்து செயல்படுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ விசாரணை நடத்தவேண்டும் என்று பா.ஜ வலியுறுத்தியது.
The post கேரளாவில் ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு: சரணடைந்த டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.