மக்களவைக்குள் இ-சிகரெட் பிடித்த எம்பிக்கு முன்மாதிரியான தண்டனை: சபாநாயகர் அதிரடி

புதுடெல்லி: மக்களவைக்குள் இ-சிகரெட் பிடித்த எம்பி மீது முன்மாதிரியான தண்டனை விதிக்கப்படலாம் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறி உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.

நாடு முழுவதும் இதுபோன்ற சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் புகார் அனுப்பினார்.இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘அவையின் புனிதத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. மேல் நடவடிக்கைக்காக அவையின் பொருத்தமான குழுவுக்கு அனுப்பப்படும்.

குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அவையில் அனைவரும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் எம்பி பதவியை கூட இழக்க நேரிடும். எனவே இந்த விவகாரத்தில் முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுவதும் நிராகரிப்பதற்கில்லை. விதிமுறை, நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: