கட்டுக்கடங்காமல் குவியும் பக்தர்கள் சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்திருக்கும் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பூஜைகள் தொடங்கின.

மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நேற்று முன்தினம் (11ம் தேதி) நடைபெற்றது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளத்தில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டது. சபரிமலை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்துக் கொண்டிருக்கும் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு 2.45 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். தொடர்ந்து மகரஜோதி தரிசனத்திற்கு முன்னோடியாக நடைபெறும் மகர சங்கிரம பூஜை 3.08 மணிக்கு தொடங்கும். இதன்பிறகு மாலை 6.35 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் இந்த திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இதன் பிறகு இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். பல நாட்களுக்கு முன்பே ஏராளமான பக்தர்கள் மகரஜோதியை தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் குடில் கட்டி தங்கியுள்ளனர்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி, 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* பத்தனம்திட்டா மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை மூடப்பட்டிருக்கும்.

Related Stories: