திருவனந்தபுரம்: கேரள அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கி வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி வருகிறார். ஒன்றிய அரசைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் ஜனவரி 12ம் தேதி (நேற்று) ஒரு நாள் சத்யாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே போராட்டம் நடந்தது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரி கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: எப்படியெல்லாம் பொருளாதார ரீதியாக கேரளாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணமாக உள்ளது.
கல்வி, சுகாதாரம் உள்பட துறைகளில் கேரளாவின் சாதனைகளை இல்லாமல் ஆக்குவது, நலத்திட்டங்களுக்கு இடையூறு செய்வது, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மற்றும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்களை நிறுத்தி வைப்பது ஆகிய மக்கள் துரோக நடவடிக்கைகளில் தான் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. பிரதமரின் பெயரில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியைக் கூட கேரளாவுக்கு தருவது கிடையாது.
இது கேரள மக்களுக்கான ஒரு போராட்டமாகும். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் என்ற நிலையில் அரசியல் சாசன சட்டத்தின்படி நமக்கு கிடைக்க வேண்டியதைக் கூட தர மறுக்கின்றனர். தங்கள் கைகளில் தான் அதிகப்படியான அதிகாரம் இருப்பதாக கருதி அவர்கள் நம்மிடமிருந்து பறிக்கும் உரிமைகளை மீட்க போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசிடம் இருக்கும் அதிகப்படியான அதிகாரம் தான் சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
