பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது ஆட்கள் அழைத்து வர கொடுத்த பணத்தில் பங்கு கேட்டு பாஜ பெண் நிர்வாகி மீது தாக்குதல்: வீடு புகுந்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல்; அமர்பிரசாத் ரெட்டி உட்பட 6 பேர் மீது வழக்கு; டிரைவர் கைது

சென்னை: பிரதமர் வருகைக்கு ஆட்களை அழைத்து வர கொடுத்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று பாஜ மாவட்ட பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அமர்பிரசாத் ரெட்டி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தேவி என்பவர் நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் கோட்டூர்புரம் பாரதி அவென்யூ 2வது தெருவில் வசித்து வருகிறேன். என் தங்கை ஆண்டாள் பாஜவில் மாவட்ட துணை தலைவராக உள்ளார். கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்த போது, சித்ராநகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக என் தங்கைக்கும், நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. கடந்த 21ம் தேதி இரவு 8.15 மணிக்கு நான் என் தங்கை வீட்டில் இருந்த போது, எங்கள் வீட்டிற்கு பாஜ பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியிடம் ஓட்டுநராக வேலை செய்யும் பாஜ மண்டல துணை தலைவர் ஸ்ரீதர், பாஜ மகளிர் அணி மண்டல தலைவர் நிவேதா, மாவட்ட துணை தலைவர் கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத 3 நபர்கள் வந்தனர்.

அப்போது ஸ்ரீதர் என் ஓனர் அமர் பிரசாத் ரெட்டியிடம், உன் தங்கை பணம் வாங்கிவந்துவிட்டாள். அதில் எங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு எங்களை அடித்து மண்டையை உடைத்தார்கள். ஆபாசமாக நடந்து கொண்டு குடும்பத்தையே அழித்து விடுவேன் என ஸ்ரீதர் மிரட்டினார். என்னை அவர்கள் அடிக்கும் போது, கஸ்தூரி என்பவர் என் கைகளை பிடித்து கொண்டார். என் மண்டையை உடைத்த உடன் நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டேன். அவர்களுக்கு பயந்து கடந்த 2 நாட்களாக வெயியே வரவில்லை. எனவே எங்கள் வீட்டிற்கு வந்து என்னையும் என் தங்கையையும் தாக்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தேவி தெரிவித்துள்ளார்.

பாஜக மாவட்ட துணை தலைவர் ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரை வீடு புகுந்து தாக்கியதாக கொடுத்த புகாரின் மீது, கோட்டூர்புரம் போலீசார் பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத், சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவரும் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுனருமான ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உட்பட 6 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் ஐபிசி சட்டவிரோதமாக கூடுதல்(147), வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல்(452), காயம் ஏற்படுத்துதல்(323), ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்(324), பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்து வகையில் நடந்து கொள்ளுதல்(354), பொருட்கள் சேதப்படுத்துதல்(427), மிரட்டல்(506)(1), 109 குற்றச்செயலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநரும், பாஜ மண்டல துணை தலைவருமான ஸ்ரீதர் நேற்று கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக கூறப்படும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உட்பட 5 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது ஆட்கள் அழைத்து வர கொடுத்த பணத்தில் பங்கு கேட்டு பாஜ பெண் நிர்வாகி மீது தாக்குதல்: வீடு புகுந்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல்; அமர்பிரசாத் ரெட்டி உட்பட 6 பேர் மீது வழக்கு; டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: