பண மோசடி செய்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் மணிப்பூர் போலீசாரால் கைது


சென்னை: சசிகலாவின் அண்ணன் ஜெயராமன். இவரது மனைவி இளவரசி. இவர்களின் மகன் விவேக். இவர் தான் சசிகலாவின் பெரும்பாலான சொத்துகளை கவனித்து வருகிறார். விவேக்கின் மாமனார் பாஸ்கர் என்ற கட்டை பாஸ்கர் (58). இவர், சென்னை புழலில் ஜெ.கிளப் என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் தொழில் செய்த போது, சுமார் ரூ2.28 கோடி பண மோசடி செய்ததாக மணிப்பூர் மாநிலம் இம்பால் போலீசார் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று புழல் கிளப்பில் இருந்த பாஸ்கரை கைது செய்தனர்.

சீருடை அணியாமல் இருந்ததால் பாஸ்கரின் மேலாளர் சந்தேகமடைந்து அளித்த தகவலின் பேரில், புழல் போலீசார் வந்து நடத்திய விசாரணையில், மணிப்பூர் போலீஸ் எனவும் பாஸ்கரை கைது செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து பாஸ்கரையும், மணிப்பூர் போலீசாரையும் புழல் காவல் நிலையம் அழைத்து வந்து வாரன்ட்டை உறுதி செய்தனர். அப்போது பாஸ்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பாஸ்கரை மணிப்பூர் போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.செம்மர கடத்தல் வழக்குகளில் ஏற்கனவே கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பண மோசடி செய்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் மணிப்பூர் போலீசாரால் கைது appeared first on Dinakaran.

Related Stories: