* 117 ஏஜென்டுகளை பிடிக்க தனிப்படை
கோவை: இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான். வாட்ஸ் அப் குழுவில் இருந்த 117 ஏஜென்டுகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் தலைவன் உள்பட இருவரை கோவை தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கம்பத்தில் கைது செய்தனர். இதுதொடர்பாக கோவை துணை கமிஷனர் ஸ்டாலின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கோவை மாநகர காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கோவை தனிப்படை போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா (46), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (33) என தெரியவந்தது.
சிக்கந்தர் பாதுஷா மீது கோவை மாநகரில் துடியலூர், சரவணம்பட்டி, பீளமேடு, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, காட்டூர், சாய்பாபா காலனி ஆகிய காவல் நிலையங்களிலும், கோவை மாவட்டத்தில் பேரூர், சூலூர் காவல் நிலையங்களிலும் மற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பிற மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த சிக்கந்தர் பாதுஷா, ஸ்டீபன் ராஜ் இருவரும் தேனி மாவட்டம் கம்பத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி 117 ஏஜென்டுகள் மூலம் பாலியல் தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஓட்டல்களில், நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். வாட்ஸ் அப் குழு மூலம் பாலியல் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலமாக பாலியல் தொழிலை, வெளிநாட்டு பெண்களை வைத்து செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். மேலும், இந்தியா முழுவதும் ஏஜென்டுகளாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்: தேனியில் கும்பல் தலைவன் கைது appeared first on Dinakaran.