உலக அமைதிக்கு பாடுபடும் பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்?: கலவரம் நடந்து 16 மாதமாகியும் அமைதி திரும்பவில்லை என காங்கிரஸ் புகார்!!

டெல்லி: உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த பாடுபடும் நபராக பிரதமர் மோடி செயல்பட முடியும் என்றால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

கலவரத்துக்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் பைரோன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், 6 மாதங்களுக்குள் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வந்ததால், பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் மக்களுக்கு பிரச்சனை இல்லை என்று அவர் கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ்;

மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலில் பிரதமரின் வருகை மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். 16 மாதங்களுக்கு பிறகும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை என்றும் நல்லிணக்கம், மறு கட்டமைப்பு இயல்பு நிலை திரும்புவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மோடி மணிப்பூருக்கு வர தேவையில்லை என முதலமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ள ஜெயராம் ரமேஷ், ரஷ்யா, உக்ரைன், போலந்து என உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த செல்லும் மோடி மணிப்பூருக்கு சென்று அமைதியை ஏற்படுத்த ஏன்? முயற்சி மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post உலக அமைதிக்கு பாடுபடும் பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்?: கலவரம் நடந்து 16 மாதமாகியும் அமைதி திரும்பவில்லை என காங்கிரஸ் புகார்!! appeared first on Dinakaran.

Related Stories: