ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி குறைப்பு; ரூ120க்கு விற்கப்பட்ட மது ரூ99க்கு விற்பனை


திருமலை: அடுத்த மாதம் முதல் ரூ120க்கு விற்கப்பட்ட மதுபாட்டில்களை ரூ99க்கு விற்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி ஆட்சியின் 100 நாட்கள் நிறைவையொட்டி அமராவதியில் உள்ள தலைமைச்செயலகத்தில் நேற்றிரவு அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மாநில செய்தி மக்கள் தொடர்பு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் பார்த்தசாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில் தரமற்ற மதுவை கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். இதனால் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய மதுபானக்கொள்கை கொண்டுவரப்பட உள்ளது. இதையொட்டி 6 மாநிலங்களில் அமைச்சரவை கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. இந்த புதிய மதுபானக்கொள்கை வரும் அக்டோபர் மாதம் அமல்படுத்தப்படும். அதன்படி தற்போது ரூ120க்கு விற்கப்படும் மதுபானங்கள் ரூ99க்கு விற்கப்படும். தற்போது அரசு நடத்திவரும் மதுக்கடைகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அங்கு பணிபுரிவோர் விரும்பும்பட்சத்தில் தனியார் ஒயின்ஸ் ஷாப்பில் தொடர்ந்து பணிபுரியலாம். அதனை அந்தந்த தனியார் முடிவு செய்துகொள்ளலாம்.

இதேபோல் ஒயின்ஷாப் நடத்த `கள்’ விற்பனையாளர்களுக்கு 10 சதவீதம் வாய்ப்பு தரப்படும். ஆந்திராவில் திருப்பதியை தவிர மற்ற இடங்களில் 12 பிரிமீயர் மதுபானக்கடைகள் தொடங்க அனுமதிக்கப்படும். மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டு போன்று தனியாக அடையாள அட்டை வழங்கப்படும். அதில் மாணவர்களின் விவரம், உடல் ஆரோக்கியம், கல்விக்கடன் உள்ளிட்டவை பதிவாகும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் சிறுகுறு தொழிற்சாலைகளுக்கு கடன் உத்தரவாதத்தை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள பிரபல கல்வி நிலையங்களை ஆந்திராவில் அமைக்க வாய்ப்புகள் தரப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றியதாக அமைச்சர் தெரிவித்தார்.

The post ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி குறைப்பு; ரூ120க்கு விற்கப்பட்ட மது ரூ99க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: