திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாளும் அனைத்து சிறப்பு சேவையும் ரத்து: கூடுதல் செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து சிறப்பு சேவைகளும் ரத்து செய்யப்படும் என்று ஆய்வு கூட்டத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 8ம்தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து துறைகளின் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யாசவுத்ரி நேற்று ஆய்வு நடத்தினார்.

இதில் சுவாமி வலம் வரும் நான்கு மாட வீதியில் பக்தர்களை அனுமதிப்பது, வெளியே செல்வதற்கான வழித்தடம், தங்கும் அறைகள், அன்னபிரசாதம் விநியோகம், போலீஸ் பாதுகாப்பு, வாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் சேவைகள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்தல், பக்தர்களின் போக்குவரத்து, வாகன நிறுத்தம், தடுப்புகள் போன்றவற்றை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசுகையில், அதிகளவில் வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் விரிவான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக பிரம்ேமாற்சவம் நடைபெறும் இந்த 9 நாட்கள் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 1 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களையும் ரத்து செய்ததோடு, அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7ம்தேதி இரவு 9 மணி முதல் அக்டோபர் 9ம்தேதி காலை 6 மணி வரை இரண்டு மலைப்பாதை சாலைகளிலும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரூ4.18 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 78,690 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,086 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ4.18 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாளும் அனைத்து சிறப்பு சேவையும் ரத்து: கூடுதல் செயல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: