ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் கலக்கும் கழிவு நீரை தடுத்து பாதுகாக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு

 

ஈரோடு, ஏப். 27: ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் கலக்கும் கழிவு நீரினையும், ரசாயன கழிவினையும் தடுத்து குளத்தை பாதுகாக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான நிலவன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது குளம் மீண்டும் பழையபடி சாக்கடைக் கழிவுகள் வழிந்து நிரம்பும் குளமாக மாறி உள்ளது.

கடந்த 2 நாட்களாக குளத்து நீரில் அதிகபடியான மாசு ஏற்பட்டு, நச்சுத்தன்மை கொண்ட வேதியல் வினை ஏற்பட்டு கொத்துக்கொத்தாய் மீன்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குளத்தில் மூச்சு திணறி மீன்கள் இறந்து கிடப்பதற்கு காரணம், குளத்து நீரில் சாக்கடை மற்றும் ரசாயன கழிவுகளால் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதும், ஆகாயத்தாமரையின் வளர்ச்சியினால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை தான். இந்த நிலை இப்படியே நீடித்தால் மீன்களைத் தொடர்ந்து இதர உயிரினங்களும் உயிரிக்க நேரிடும். மேலும், குளத்து நீர் நச்சுத்தன்மையாக மாறியதன் விளைவு மிக மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. இது சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும். எனவே, குளத்தில் செத்து கிடக்கும் மீன்களையும், ஆகாயத்தாமரையையும் குளத்திலிருந்து அகற்ற வேண்டும்.

பி.கே.டி நகரில் உள்ள குறிப்பாக அனுமதிற்ற குடியிருப்புகள் மற்றும் கடைகள் வழி, வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலந்து வருகிறது. இதனால் குளம் பழையபடி சாக்கடை குட்டையாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியும் உடனடியாக குளத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விதிமுறைகளுக்கு எதிராக உள்ள கட்டடங்கள் மீது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பினை துண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் சாயப்பட்டரை மற்றும் டையிங் பட்டறை கழிவுகள் கலக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து உண்மை தன்மையைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் நீர் வழித்தடம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதை வரும் பருவமழை காலங்களுக்குள் நீர் வழித்தடத்தை செப்பனிட்டு திறந்து விட வேண்டும். கனிராவுத்தர் குளத்தில் தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. அதேபோல் விதி மீறல்களும் உள்ளது. எனவே, ஈரோட்டின் பொக்கிசமான கனிராவுத்தர் குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்தும் கழிவுநீர் கலப்பதிலிருந்தும் பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவ வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் கலக்கும் கழிவு நீரை தடுத்து பாதுகாக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு appeared first on Dinakaran.

Related Stories: