ரூ.3.12 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திறப்பு: பல துறைகளுக்கான புது கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவள்ளூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் ரூ.3 கோடியே 12 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.தந்தை பெரியாரின் சமூக சமத்துவ கொள்கையை செயல்படுத்தும் பொருட்டும், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்ற நோக்கத்துடனும் ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ கலைஞரால் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி சமத்துவபுரம் ஆகிய 2 சமத்துவபுரங்களும் சீரமைப்பு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்கள் 3 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்றைய தினம் திறந்து வைத்து, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.மேலும், கடலூர் மாவட்டம் – முஷ்ணம் ஒன்றியத்தில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்பூர் மாவட்டம் – காங்கயம் ஒன்றியத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் – விருதுநகர் ஒன்றியத்தில் 3 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – வடமதுரை ஒன்றியத்தில் 3 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடமானது 17,324 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலகம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்
ளன.மேலும், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனி அறைகளுடன் கிருஷ்ணகிரியில் 8 கோடி ரூபாய் செலவிலும், நாமக்கல்லில் 8 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிலும், தலா 28,716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடங்கள்;

கடலூர் மாவட்டம் – நல்லூர் ஒன்றியம், வேப்பூர் ஊராட்சியில் 51 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 57,620 சதுர அடி பரப்பளவில் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில், 10 பேருந்துகள் நிறுத்துவதற்கென தனித்தனி பேருந்து நிறுத்தும் தளங்கள், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான தளங்கள், பயணிகள் அமரும் இடம், குடிநீர், மின்விளக்கு வசதிகள், கழிப்பறைகள், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரத்தைக் காட்டும் வரைபலகை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

The post ரூ.3.12 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திறப்பு: பல துறைகளுக்கான புது கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: