மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் துவங்க முன்வர வேண்டும்

*கலெக்டர் வேண்டுகோள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்டவர்கள் வங்கிகளில் பல்வேறு கடன் வசதிகள் பெற்று சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும் என கலெக்டர் அம்ரித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு 21 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 700 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், முதுகு தண்டுவடம் பாதித்த மற்றும் இரு கால்களும் பாதித்த இரு நபர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறன் கொண்டவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கலெக்டர் அம்ரித் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, மாற்றுத்திறன் கொண்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது, மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இரு கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஒரு கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது.

இதற்கு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை வழங்கலாம். மேலும், கல்வித் தொகை இதுவரை 1ம் வகுப்பு முதல் 5ம் தேதி வரை ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இதனை தமிழக அரசு இரட்டிப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. அதேபோல், ெதாழிற்கல்வி பயிலுபவர்கள் மற்றும் உயர்கல்வி பயிலுபவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இதனை உயர்த்தி ரூ.14 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் அல்லது மாற்றுத்திறன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும், சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பல்வேறு கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கிளில் ரூ.25 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெற்று மாற்றத்திறன் கொண்டவர்கள் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

மேலும், மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும், மாற்றுத்திறன் கொண்டவர்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் குறைகள் இருந்தால், மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்..
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில், ஊட்டி கோட்டாட்சியர் துரைசாமி, தாசில்தார் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெகதீசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் துவங்க முன்வர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: