உரிமையாளர்களின் அலட்சியத்தால் திருவள்ளூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரத்தில் இருந்து சென்னை, திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஊத்துக்கோட்டை, பெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. பள்ளி, கல்லூரி வாகனங்களும் தொழிற்சாலைகளின் பேருந்துகளும் வேன்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள சாலைகளிலும் கால்நடைகள் சுற்றிவருகின்றன. அதன் உரிமையாளர்கள் கட்டிப் போடாமல் அவிழ்த்துவிடுவதால் பொதுவெளியில் அவைகள் தாராளமாக உலா வருகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலையின் நடுவே கால்நடைகள் படுத்துக் கொள்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்திருப்பது தெரியாமல் அதன் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளின் கை, கால்கள் உடைந்துவிடுகிறது.

‘’கால்நடைகளை சாலைகளில் சுற்றவிடும் அதன் உரிமையாளர்கள் மீது விலங்குகள், பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்’’ என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இதுபோல் நடக்கிறது. எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

The post உரிமையாளர்களின் அலட்சியத்தால் திருவள்ளூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்து appeared first on Dinakaran.

Related Stories: